Pages

Wednesday, February 27, 2013

இஸ்லாமிய ஒற்றுமை



அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பான சகோதரர்களே.. ஒற்றுமை என்ற தலைப்பில் எனது நண்பர் எழுதிய ஒரு கட்டுரையை இங்கே சமர்ப்பிக்கிறேன்.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

எல்லா புகழும் அகில உலகங்களின் அதிபதியாம் அல்லாஹ் ஒருவனுக்கே , அவனது சாந்தியும் சமாதானமும் நபி (ஸல்) அவர்கள் மீதும், அன்னாரின் குடும்பத்தினர், சஹாபாக்கள் மற்றும் நம்மவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக...

இஸ்லாமிய ஒற்றுமை
--------------------------------

அன்பிற்கினிய இஸ்லாமிய சொந்தங்களே, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில் தாழ்வு , ஆம் உண்மைதான் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்றும் தமிழ் கூறும் நல் உலகில் சொல்வதுண்டு.

அகில உலகங்களின் அதிபதியாம் அல்லாஹ் நம்மை படைத்து இறை உவப்போடு வாழும் வழியை தன் தூதர் மூலம் நமக்கு கொடுத்த வழிகாட்டுதல் தான் இஸ்லாம், இஸ்லாம் என்ற வார்த்தைக்கு அமைதி, சாந்தி என்பது பொருள், அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றும் போது இவ்வுலகில் அமைதியும், சாந்தியும் என்றும் நிலவும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

இனத்தாலும், குலத்தாலும் வேற்றுமை பாடி பிரிவுண்டு,சதா சண்டை இட்டு கிடந்த அரபு மக்களை ஒற்றுமை எனும் குடையின் கீழ் கொண்டுவந்து உலக மக்களுக்கு ஒரு நல் எடுத்துகாட்டாய் அம்மக்களை மாற்றியது இஸ்லாம் தான்.

அல்லாஹ் கூறுகிறான்,

இன்னும், நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்;. நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்;. அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை (அருள் கொடைகளை) நினைத்துப் பாருங்கள்;. நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் - உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகிவிட்டீர்கள்;. இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான்....
(03:103)

இறை மார்க்கத்தின் மூலம் பகைவர்களாய் இருந்தவர்களை சகோதரர்களாய் மாற்றியது இஸ்லாம் தான், இனத்தையும் குலத்தையும் சொல்லி சண்டை இட்டு கொண்டு நரக நெருப்பின் குழியில் மேல் இருந்தவர்களை காப்பாற்றியது இஸ்லாம் தான், அந்த ஏகனின் கட்டளை "அல்லாஹ்வின் கயிற்றை வலுவாக பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்" என்பது தான்.

கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து விடாதீர்கள் என்ற கட்டளையுடன் அதனால் ஏற்படும் விபரீதம் குறித்தும் அல்லாஹ் நம்மை எச்சரிக்கிறான் அதாவது நாம் கோழைகள் ஆகி நம் பலம் குன்றியும் போகும் நிலை ஏற்படும் என்ற எச்சரிக்கை தான் அது, மேலும் நாம் அனைவரும் சகோதரர்களே நம்மில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால் சமாதானம் செய்து வைக்க வேண்டும் அல்லாஹ் நம்மை ஏவுகிறான்.
(பார்க்க அல் குர்ஆன் 8:46, 49:10)

மேலும் நம்மை வேற்றுமை ஏதுமில்லா ஒரே சமூகம் என்றும் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி பல பிரிவுகளாக பிரிந்து விட்டவர்களுடன் எந்த சம்மந்தமும் முஸ்லிம்களுக்கு இல்லை என்றும் மேலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டுபண்ணுதல் ஷைத்தானிய செயல் என்றும் அல்லாஹ் கூறுகிறான், (பார்க்க அல் குர்ஆன் 21: 92, 30:31, 6:159)

இஸ்லாமிய கடமைகளில் தொழுகை, ஜகாத், ஹஜ் போன்ற கடமைகளை நாம் கூட்டாக நிறைவேற்றும் படியும் அப்படி நிறைவேறும் போது அதற்கு அதிக நன்மைகளை அல்லாஹ் வழங்குகிறான் என்று நமக்கு மார்க்கம் போதிக்கிறது,

ஜமாத்தின் முக்கியத்துவம் குறித்து நபி ஸல் அவர்கள் கூறினார்கள்,

ஒருவர்(இஸ்லாமியக்)கட்டமைப்பிலிருந்து பிரிந்து, அதே நிலையில்) இறந்துவிட்டால் அவர் ஜாஹிலிய மரணத்தை தழூவியவர் ஆவார். இப்னு அப்பாஸ் (ரலி) (புகாரி)

அல்லாஹ்வின் கரங்கள் கூட்டமைப்புடனேயே இருக்கும் யார் கூட்டமைப்பிலிருந்து தனிமைப்படுகிறாரோ அவர் தன்னை நரக நெருப்புக்குத் தனிமைப்படுத்திக் கொண்டவராவர் (திர்மதி)

நிரந்தர ஒற்றுமைக்கு கேடு உண்டாக்கும் அனைத்து சுயநல வாசல்களையும் சகிப்புதன்மை,விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை என்ற சகோதரத்துவ சாவிக்கொண்டு பூட்டியதே நபி அவர்களின் தனி சிறப்பு.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள்.கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்துகொண்டி ருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள்.ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார்.அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ அவருக்குத் துரோகமிழைக்கவோஅவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். ஒருவர் தம் சகோதர முஸ்மைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்றவரின் உயிர் பொருள் மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும். அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) (நூல்: முஸ்லிம்)

மேலும் கூறினார்கள்,

" ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு சகோதரன் ஆவான்.அவனுக்கு அநியாயம் செய்யக் கூடாது.காட்டிக் கொடுக்கக் கூடாது.யார் தன் சகோதரனின் தேவையை நிறைவேற்றுகிறாரோ அவரது தேவையை அல்லாஹ் நிறைவேற்றுகிறான்.யார் ஒரு முஸ்லிமின் நெருக்கடியை அகற்றுகிறாரோ கியாமத் நாளின் நெருக்கடிகளில் ஒரு நெருக்கடியை அவரை விட்டும் அல்லாஹ் அகற்றுகிறான்.யார் ஒரு முஸ்லிமின் குறையை மறைக்கிறாரோ அவரது குறையை அல்லாஹ் மறைக்கிறான்"என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரீ , முஸ்லிம்

முஸ்லிம்களின் ஒற்றுமை குறித்த நபி ஸல் அவர்களின் உவமையை பாருங்கள்,

ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும் அன்பு செலுத்துவதிலும் இறக்கம் காட்டுவதிலும் இறை நம்பிக்கையாளர்கள் ஓர் உடலை போன்றவர்கள் .உடலின் ஒரு பகுதி சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் உறங்காமல் விளித்து கொண்டிருக்கின்றன அத்துடன் உடல் முழுதும் காய்ச்சல்கண்டு விடுகிறது என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் .-அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல் :புகாரி

ஒரு முஃமின் மற்றொரு முஃமினுக்கு கண்ணாடி போன்றவர் நூல் :முஸ்லிம்

சமூகத்தில் நிலவும் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் எந்த ஒரு செயலையும் பெரிய பாவமாகவே இஸ்லாம் கருதுகிறது, அப்படிப்பட்ட காரியங்களை செய்வோர் தவ்பா செய்து மீள வேண்டும் என்று அல்லாஹ் கட்டளை இடுகிறான், (பார்க்க அல் குர்ஆன் 49: 11,12)

அன்பிற்குரியவர்களே இன்று நாம் சந்திக்கும் பல இன்னல்களுக்கு காரணம் அல்லாஹ்வின் மார்க்கத்தை தொலைத்து , பல பிரிவுகளாக நாம் பிரிந்து ஒருவருக்கொருவர் சண்டை இட்டு கொண்டு, தன்னிடம் இருப்பதை கொண்டே திருப்தி அடைந்து கொண்டு வாழ்ந்து வருகிறோம், நாம் சந்திக்கும் அணைத்து பிரச்னைகளுக்கும் மிக சிறந்த தீர்வு கொண்ட மார்க்கத்தில் நம்மை அல்லாஹ் ஆக்கி இருக்கிறான், ஆரோக்கியமான கருத்து பரிமாற்றங்கள் நம்மிடையே இருக்கலாம் கருத்து வேற்றுமையை கொண்டு பிரிந்து விடுதல் என்பது இஸ்லாமிய பார்வையில் ஹராம் ஆகும். பிரிவு என்பது பொறாமையினால் ஏற்படும் விபரீத விளைவும் ஷைத்தானின் செயலும் ஆகும், சகோதரத்துவமும், ஒற்றுமையும் நம்மிடையே உள்ள நேசத்தினால் அல்லாஹ்வால் கொடுக்கப்படும் வெகுமதி ஆகும்.

அல்லாஹ்வின் மார்க்கத்தின் பால் ஒன்றிணைய இதன் மூலம் கோருவதுடன் இஸ்லாமிய சொந்தங்களே ! பிரிந்து போய் விடாதீர்கள்! இறைவனிடமிருந்து வந்த அழைப்பை உணர்ந்து சண் மார்க்கத்தில் திரண்டு விடுங்கள் என்று அழைத்து வாய்ப்புக்கு நன்றி கூறி முடிக்கிறேன்.

சகோதர வாஞ்சையுடன்
பைசல்

No comments:

Post a Comment