Pages

Tuesday, January 19, 2016

நல்ல குழந்தை


அஸ்ஸலாமு அலைக்கும்.

இஸ்லாத்தின் பாதையில் குழந்தைகளை வளர்ப்பது என்பது அழகான செயல். அதை நடைமுறையில் செயல்படுத்துபவர்களுக்கே தெரியும். ஒவ்வொரு குழந்தைகளும் இஸ்லாத்தின் அடிப்படையை அறிந்து வளர்வதே சிறப்பு.

லா இலாஹா இல்லால்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று அடிக்கடி கூறி நமது ஈமானை புதுப்பித்துக் கொண்டே இருக்கும் நாம், அதனை நமது குழந்தைகள் முன்பாக அதிகமாக கூற வேண்டும்.


ஏனெனில், நாம் பார்ப்பதை பார்த்து குழந்தைகள் வளருவதில்லை. நாம் செய்வதையும், சொல்வதையும் கேட்டே குழந்தைகள் வளர்கின்றன.

நபி இப்ராஹீம்(அலை) அவர்கள் தமது பிள்ளைகளிடம் கூறியதை அல்லாஹ் குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்.

''என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம் களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது'' என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர். (அல்குர்ஆன் 2:132)"

மரண தருவாயில் ஒருவருடைய நிலை என்ன என்பதை அல்லாஹ் மட்டுமே அறிவான். அந்த தருவாயில் முஸ்லிமாக மரணிக்க வேண்டுமென்றால், தனது வாழ்நாளில் அவன் இஸ்லாமிய கொள்கையை பற்றிப் பிடித்தவர்களாக வாழ்ந்து இருக்க வேண்டும்.

மாணவர்கள், ஒரு வருடம் கழித்து வரும் தேர்வுக்கு, அந்த வருடம் முழுவதும் நன்றாக படிக்கிறார்கள். அப்படி படிப்பவர்களால் மட்டுமே அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற முடிகிறது. உலக தேர்வுக்கு இப்படி படிப்பதை போன்றே, மறுமை தேர்வுக்கும் நன்றாக படிக்க வேண்டும் என்ற எண்ணத்தை குழந்தைகள் உள்ளத்தில் விதைக்க வேண்டும்.

கபுரில் வைக்கப்படும்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு சுலபமாக பதில் சொல்லி விடலாம் என்று கூற முடியாது. இம்மையில் பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே சொல்ல முடியும் என்று கூறி வளர்ப்பதும் நன்று.

அல்லாஹ் என்றால் அடிப்பான், தண்டிப்பான் என்று மட்டுமே கூறியும் வளர்க்க கூடாது. அவனை விட கருணையாளன் எவரும் இல்லை என்றும் அவன் எந்த அளவுக்கு மன்னிப்பை விரும்புபவன் என்றும் கூறி வளர்க்க வேண்டும்.

குழந்தை வளர்ப்பில் தாய்க்கு மட்டுமே பங்கில்லை. தகப்பனுக்கு பங்குண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும், ஒழுக்கத்தையும் விட சிறந்த அன்பளிப்பை வழங்க முடியாது". (திர்மிதி-1952)

ஒரு தந்தை நல்ல கல்வியையும், ஒழுக்கத்தையும் தர வேண்டுமென்றால், முதலில் அந்த தந்தை இஸ்லாத்தை பின்பற்றி வாழக்கூடியவராக இருக்க வேண்டும். அவருடைய ஈமானின் பிரதிபளிப்பு தனது குடும்பத்தில் இருக்க வேண்டும்.

இரவு நேரத்தில் கதை கூறும் பழக்கமே அழிந்து விட்டது என்று நினைக்கிறேன். இரவு கதை கூறி குழந்தைகளை தூங்க வைக்கும் பழக்கத்தை தந்தையும், தாயும் பின்பற்ற வேண்டும். வெறுமனே ராஜா ராணி கதை, சிங்கம் புலி கதை கூறுவதல்ல. மாறாக தூதர்களின் வாழ்க்கை வரலாற்றை கதையாக கூறலாம். உத்தம சஹாபாக்களின் வாழ்க்கை வரலாற்றை கதையாக கூறலாம். நாளடைவில் அவர்கள் இந்த வரலாறுகளை படிக்கும்போது இவைகள் ஞாபகத்துக்கு கொண்டு வரும்.

 குழந்தைகளை வளர்ப்பதில் நாம் சரியாக திட்டமிட வேண்டும். அதற்க்கு முதலில் நாம் நமது வாழ்க்கையில் இஸ்லாத்தை சரிவர பின்பற்றி, நம்முடைய குழந்தைகளுக்கு சிறந்த ஆசானாக திகள வேண்டும்.

ஃபேஸ்புக், மொபைல் கேம், கம்ப்யூட்டர் கற்றுக் கொடுப்பது பெரிதல்ல. குர்ஆன் ஓத, தொழுக, நோன்பு வைக்க, பிறருக்கு உதவ கற்றுக் கொடுப்பதே சிறந்தது. அதுவே நம்மையும், நமது குடும்பத்தையும் மறுமையில் வெற்றியாளனாக மாற்றும்.

~ அப்துல் பாசித்.

No comments:

Post a Comment