Pages

Thursday, May 31, 2012

சூனியம் (குரானுக்கு முரணானதா?)




அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பான சகோதரர்களே, சூனியம் என்றால் என்ன? இஸ்லாம் இதை பற்றி என்ன கூறுகிறது என்று நான் சில அறிஞர்களிடம் கேட்டு தெரிந்து கொண்ட செய்திகளை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்கிறேன். சற்று மார்க்கம் தெரிந்த சகோதரர்களிடமும், சற்று நன்கு மார்க்க விசயம் தெரிந்த சில சகோதரர்களிடமும் நான் இதை பற்றி கேட்டேன். அதிலும் சில முரண்பாடுகள் இருக்கவே செய்தது. சில சகோதரர்கள் இருக்கு என்றார்கள். சிலர் இல்லை என்றார்கள். இன்னும் சிலரோ, நான் சில கேள்விகளை கேட்டதால், இருக்கு.... ஆனா இல்லை.... என்றார்கள். இருக்கு என்பவரும் குர்ஆன் ஹதிஸை ஆதாரமாக வைகிறார்கள். இல்லை என்பவர்களும் குர்ஆன் ஹதிஸை ஆதாரமாக வைகிறார்கள். நீ என்னப்பா சொல்ல வர. இருக்குங்கிரியா? இல்லைங்கிறியா? என்று கூறுகிறீர்களா? தொடர்ந்து படியுங்கள்.

"சூனியம் மூலியமாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்கு  எப்படி பட்ட தீங்கும்  விளைவிக்க முடியும்".எனபது மாந்த்ரீகம் அல்லது சூனியம் செய்ய கூடியவர்கள் கூறக்கூடிய பதில். இன்னாரிடத்தில் ஒருவர் போய், ஒசாமா பின்லேடன் க்கு சூனியம் வைத்து அவரை கொள்ளுங்கள் என்றாராம். ஒசாமாவின் பெயரை கேட்டதாலோ என்னவோ, அவர் சற்று ஆடித்தான் போய்டாரம். இதன் அடிப்படையில் சூனியம் வைத்து இந்த காலக்கட்டத்தில் ஒருவரை எதுவும் செய்ய முடியுமா என்றால், இன்று மக்கள் தொகை பல கோடியை எட்டி இருக்காது.

சரி, இந்த காலக்கட்டத்தில்தான் சாத்தியம் இல்லை. அந்த காலத்தில் இருந்ததா? என்று கேட்பீர்களேயானால், கீழே குறிப்பிட்டுள்ள ஹதிஸை படியுங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அழிக்ககூடிய 7 பாவங்களை விட்டு விலகிக்கொள்ளுங்கள். 1. ஷிர்க் , 2. சூனியம், 3. நியாயமின்றி ஓர் உயிரை கொலை செய்தல், 4. வட்டியை உண்ணுதல், 5. அனாதைகளின் சொத்தை அபகரித்தல், 6. போரில் புறமுதுகு காட்டுதல், 7. ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறுதல்.(புஹாரி: 2766)

மேலே குறிப்பிட்டுள்ள ஹதிசின் படி பார்த்தோமேயானால் சூனியம் என்று ஒன்று இருப்பதை அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். சூனியம் என்ற ஒன்று இருப்பதால் தான் அதனை பெரும் பாவங்கள் வரிசையில் 2வதாக குறிப்பிட்டுள்ளார்கள். இல்லாத ஒன்றை அல்லாஹ்வின் தூதர் கூறி இருக்கமாட்டார்கள் என்பது ஒவ்வொரு முஸ்லிமின் நம்பிக்கை. அதுவும் அதனை தவிர்த்து கொள்ளுங்கள் என்றும் கூறி இருபதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், சூனியம் என்ற ஒன்று இருக்கிறது அதனை கற்பதிலிருந்தும், கற்பிக்கப்படுவதில் இருந்தும் முஸ்லிம்கள் தவிர்துக்கொள்ளப்பட வேண்டும் என்பதே.

சரி குரான் சூனியம் ஒன்று இருப்பதை மறுக்கிறதா என்றால்?  நிச்சயமாக இல்லை. உதாரணத்துக்கு வசனங்கள் வேண்டுமென்றால், மூஸா நபி (அலை) அவர்கள் பிர்அவ்ன் னிடம் போய் இஸ்ரேலின் சமூகத்தை விடுதலை செய்ய வேண்டும் என்றும், அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் என்றும் அவனிடத்தில் கூறும்போது அந்த நரகவாசி ஒரு போட்டி வைக்கிறான். அதை பற்றி தெள்ளத்தெளிவாக அல்லாஹ் கூறும் வசனங்களை படியுங்கள்.

சூரா அத்தாஹா 20 வது அத்தியாயம் 66 வது வசனத்தில் இருந்து படித்தீர்களேயானால்:
அதற்கவர் "அவ்வாறன்று நீங்கள் முதலில் போடுங்கள். என்று கூறினார். அந்நேரத்தில் அவர்களுடைய கயிறுகளும், அவர்களுடைய தடிகளும் அவர்களின் சூனியத்தின் காரணமாக, நிச்சயமாகவே பாம்புகளாக விரைந்து ஓடுவது போல் இவருக்குத் தோன்றியது.

67 வது வசனத்தில்: ஆகவே மூசா தன் மனதில் பயத்தை உணர்ந்தார்.

68 வது வசனத்தில்: (அது சமயம் அவரிடம்) "நீர் பயப்படாதீர்; நிச்சயமாக நீர்தான் (இந்த சூனியக்காரர்களை மிகைத்து) மிக மேலோங்கியவர்" என்று நாம் கூறினோம்.

69 வது வசனத்தில்: மேலும் "உமது வலக்கையில் இருப்பதை நீர் போடுவீராக; அவர்கள் செய்தவற்றை அது விழுங்கிவிடும். அவர்கள் செய்ததெல்லாம் சூனியக்காரர்களின் சூழ்ச்சியே ஆகும். சூனியக்காரன் எங்கு வந்த போதிலும் வெற்றி பெற மாட்டான்" என்று கூறினோம்.

ஆகவே சகோதரர்களே, மேலே உள்ள வசனத்தில் அல்லாஹ்தாலா சூனியக்காரர்கள் சூனியத்தின் மூலியமாக பொய்யை உண்மையாக காட்டவும் செய்தார்கள் என்று கூறுகிறான். மேலும் நபி மூசா (அலை) அவர்கள் அந்த சூனியத்தை பார்த்து பயப்படவும் செய்தார்கள் என்றும் குறிப்பிடுகிறான். சூனியக்காரர்கள், சூனியம் என்ற ஒன்று இருந்ததால்தான் அல்லாஹ் சூனியம் என்றே அதனை குறிப்பிடுகின்றான். சூனியத்துக்கு அரபியில் சிஹ்ரு என்பார்கள். இந்த வார்த்தையைத்தான் அல்லாஹ் குர்ஆனில் உபயோகப்படுத்துகிறான்.

மேலும் சூரா பகரா 2 வது அத்தியாயம் 102 வது வசனத்தை படிப்பீர்களேயானால்; சைத்தான்கள் பொய்யாக ஓதியவற்றை என்ற வார்த்தையை அல்லாஹ் கூறுகிறான். மேலும் மனிதர்களுக்கு கற்று கொடுத்து வந்தார்கள் என்றும் கூறுகிறான். சூனியத்தை யார் விலைக்கு வாங்கி கொண்டாரோ அவர்களுக்கு மறுமையில் எந்த பாக்கியமும் இல்லை என்பதையும் அல்லாஹ் இந்த வசனத்தில் கூறுகிறான். 

ஆகவே, சூனியம் என்ற ஒன்று இல்லை என்று அல்லாஹ்வும் கூறவில்லை, அல்லாஹ்வுடைய தூதரும் கூறவில்லை. அதனால், நாமும் இல்லை என்று கூறாமல், கற்பிப்பதும், கற்பிக்கப்படுவதும் குப்று என்று கூறுவதுதான் சரியானது. மேலும் ஜுரம் வந்தால், சூனியத்தின் மூலமாகத்தான் இது வந்தது என்று கருதி, அந்த சூனியத்தை எடுக்க இன்றைய டுபாகூர் மந்திரவாதிகளை தேடி செல்லாமல் நமது ஈமானை பாதுகாத்து கொள்வதுதான் சிறந்தது.

இந்த செய்தியை ஒரு புத்தகம் போடக்கூடிய அளவுக்குகூட எழுதலாம். உங்கள் நேரத்தையும், என்னுடைய நேரத்தையும் கருத்தில் கொண்டு ரொம்பவே சுருக்கி எழுதி இருக்கிறேன். நீங்கள் மார்க்க செய்திகளை கற்பவராக மட்டும் இல்லாமல், மற்றவர்களுக்கு கற்று கொடுக்க கூடிய முயற்சியில் இறங்குங்கள் என்றும் கூறிக்கொள்கிறேன். உங்களுடைய அதிகப்படியான நேரத்தை இஸ்லாத்தின் வழியில் பயன்படுத்தி மறுமையில் வெற்றியாளர்களாக இருக்க முயற்சி செய்யுங்கள்.

குறிப்பு: அன்பான சகோதரர்களே, நான் மார்க்கம் சம்பந்தமான செய்திகளை பதிவு செய்து இருப்பதால், ஏதேனும் தவறுதலாக ஏதேனும் பதிவு செய்து இருந்தால் சுட்டி காட்டவும். சுட்டி காட்டவும் என்றால், இஸ்லாம் சொல்ல கூடிய வழிமுறையில் சுட்டி காட்டவும்.

No comments:

Post a Comment